×

எப்போது நிரந்தரம்? பேரூராட்சி அலுவலகங்களில் 15 ஆண்டுகளாக தினக்கூலி பணி கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் கதறல்

தேனி, நவ. 5: தமிழகம் முழுவதும் 528 பேரூராட்சிகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் பட்டதாரி ஆபரேட்டர்கள் 15 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் அப்போது தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்தனர். ஓரிரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் கிடைத்து விடும் என நம்பிய இவர்கள், 15 ஆண்டுகளை கடந்தும் நிரந்தரப்படுத்தப்படாததால் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து இவர்கள் கூறுகையில்,`` தற்போது பேரூராட்சிகளில் பிறப்பு, இறப்பு பதிவு, பிளான் அப்ரூவல், வரிவசூல், வரவு - செலவு கணக்குகள் உள்ளிட்ட நிர்வாகம் தொடர்பான ஒட்டு மொத்த விஷயங்களும் கம்ப்யூட்டர் மூலமே நடக்கிறது. அத்தனை சான்றுகளும் ஆன்லைன் மூலம் தான் பெற முடியும் என்ற நிலை வந்து விட்டதால், எங்களுக்கான பணிச்சுமை மிகவும் அதிகரித்துள்ளது. கடுமையாக பணிபுரியும் நாங்கள் தற்போதும் தினக்கூலி சம்பளம் பெற்று மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறோம். அரசு எங்கள் சர்வீஸ், படிப்பு, பணிநிலை அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து மனு அனுப்பி வருகிறோம். எனவே, தமிழக அரசு எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்று கூறினர்.

Tags : Computer operators ,offices ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர்...